×

பேனரில் அனுமதி எண் இல்லாவிடில் நடவடிக்கை

புதுச்சேரி, செப். 19: புதுவையில் நடந்த டிஜிட்டல் பிரிண்டர், திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேனரில் அனுமதி எண் இல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் இன்ஜினியர் சுப ஸ்கூட்டரில் சென்றபோது அதிமுக பேனர் விழுந்ததில், லாரி ஏறி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பேனர், கட் அவுட் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, தமிழக அரசு மீது சரமாரி கேள்வி எழுப்பியது. அதன்படி புதுச்சேரியிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே பேனர் தடை சட்டம் அமலில் இருந்தும், பேனர்கள் வைப்பதும், எதிர்ப்பு கிளம்பும்போது அகற்றுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சென்னை சம்பவத்தை தொடர்ந்து தற்போது பேனர் தடை சட்டம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் இயக்குனர் மலர்க்கண்ணன், டிஜிட்டல் பிரிண்டர் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடன் பேனர்கள் வைப்பது, பிரிண்ட் செய்து தருவது குறித்து நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் நகராட்சி ஆணையர்கள் அர்ஜூன் ராமகிருஷ்ணன் (புதுச்சேரி), கந்தசாமி (உழவர்கரை), கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆறுமுகம் (வில்லியனூர்), சவுந்தர்ராஜன் (அரியாங்குப்பம்), உதவி பொறியாளர்கள் தமிழரசன் (பாகூர் கொம்யூன்), கருத்தாயன் (நெட்டப்பாக்கம் கொம்யூன்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப்பின் உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பேனர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இது குறித்து திருமண மண்டப உரிமையாளர்கள், டிஜிட்டல் பிரிண்டர்ஸ் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளை கூறியிருக்கிறோம். பொது இடத்தில் திறந்தவெளியில் பேனர்கள் வைக்கக்கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் தான் பேனர்கள் வைக்கப்பட வேண்டும். திருமண மண்டப வளாகத்தில் 2 பேனர்கள் மட்டும் 10க்கு 10 அடி அளவில் வைக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.

பேனர்களில் அனுமதி எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இருக்கிறோம். விதிமுறைகளை கடைபிடிக்காமல் பேனர்கள் வைக்கப்பட்டால் அந்த பேனர்களை அச்சிட்டு கொடுத்த பிரிண்டர்ஸ்க்கு நகராட்சிகள் மூலம் கொடுக்கப்பட்டிருந்த வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் காவல்துறை மூலமும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பேனர்கள் அனுமதி பெறாமல் வைக்கப்படுவதை கண்காணித்து
நடவடிக்கை எடுக்க 24 மணி நேர ரோந்துப்பணியும் தொடங்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளுக்கு பொதுப்பணித்துறை அனுமதி கொடுத்துள்ளது. அதற்கான அனுமதியை உள்ளாட்சித் துறையிடமும் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

டிஜிட்டல் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் கூறும்போது, பேனர்களை அச்சிட்டு தருவதற்கு பல்வேறு விதிமுறைகளை கூறினர். ஒரு சிலவற்றை ஏற்றுக்கொண்டோம். அனுமதி பெறாத இடத்தில் பேனர்கள் வைக்கப்பட்டு விழுந்தால் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதற்கு உறுதிமொழி பத்திரம் எழுதித்தரவும் கேட்டுள்ளனர். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றனர். திருமண மண்டப உரிமையாளர்கள் கூறுகையில், திருமண மண்டப வளாகத்திற்கு வெளியே வைக்கப்படும் பேனர்கள் விழுந்தால், அதற்காக மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அனுமதியை மீறி அதிகளவு பேனர் வைப்பதற்கும், அது விழுந்தால் ஏற்படும் பாதிப்புக்கும் வைப்பவர்களின் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...