×

விருத்தாசலம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம், செப். 19: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வரும் 2020ம் ஆண்டு அத்திட்டம் தூய்மையே சேவை என மாற்றி செயல்பட இருக்கிறது. அதன்படி தூய்மையே சேவை திட்டத்தின் முக்கியத்துவம், செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் விருத்தாசலம் நகராட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் பாலு தலைமை தாங்கி பேசினார். துப்புரவு அலுவலர் குமார், மருத்துவர் ரமா, மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை, தனிநபர் கழிவறை, பிளாஸ்டிக் தவிர்த்தல், வீடு வீடாக சென்று தரம்பிரித்து குப்பைகளை பெறுதல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமான குப்பைகளை பொதுமக்கள் துப்புரவு பணியாளர்களின் கையில் கொடுக்க வேண்டும். குப்பைகளை கொடுக்கும்போதே தரம் பிரித்து கொடுக்க வேண்டும். வெளிப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. தரம்பிரித்து கொடுக்கப்படாத நபர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுத்து பின்பு அபராத தொகை வசூலிப்பது உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி நகராட்சி ஆணையர் பாலு பேசினார். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் முத்தமிழன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மணிமாறன், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் சுய உதவிகுழுக்களை சேர்ந்த மகளிர், கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Cleanup Service Plan Awareness Meeting ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...