தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை அனுமதிக்க மாட்டோம்

சிதம்பரம், செப். 19: திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, பொறியாளர் அணி செயலாளர் துரை.கி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மருதூர் ராமலிங்கம், சண்முகம், ஐயப்பன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சக்திவேல், மனோரஞ்சிதம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர்கள் சிதம்பரம் செந்தில்குமார், கடலூர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் காட்டுமன்னார்கோவில் முத்துசாமி, முஷ்ணம் தங்க.ஆனந்தன், புவனகிரி மனோகரன், குமராட்சி மாமல்லன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், இளைஞரணி கார்த்திகேயன், அப்பு சத்யநாராயணன், மாணவரணி நடராஜன், மகளிரணி அமுதாராணி, பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நாளை (20ம்தேதி) கடலூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், சரிபார்த்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையில் 10 ஆயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடிஅமின் போல் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை அனுமதிக்க மாட்டோம். பாஜக அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். கடலூர் மாவட்டத்தில் போடப்பட்ட சாலைகள் காணாமல் போய்விட்டது. குடிமராமத்து பணிகள் அதிமுக கிளை செயலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. குடிமராமத்து பணி போர்வையில் மண் திருடப்படுகிறது. வீடு கட்டும் திட்டத்திற்கு மணல் கிடைக்காததால் பணிகள் முடங்கியுள்ளன என்றார்.

Tags : Tamil Nadu ,
× RELATED 'ஹிந்தி தெரியாததால் இந்திய...