×

கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய கூலி உயர்வு

கடலூர், செப். 19: கடலூர் மாவட்ட கைத்தறி பட்டறை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயாளன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பெடல் தறிக்கு ஏற்கனவே அரசு அறிவித்த கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகள், வேட்டி ஒன்றுக்கு 69 ரூபாய் 75 காசுகள் மற்றும் இலவச சீருடை திட்டத்தின் கீழ் மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 35 காசுகள். ஆனால், பெடல் தறி நெசவாளர்களுக்கு இதுவரை 1.8.2019 வரை சேலைக்கு 66 ரூபாயும், வேட்டிக்கு 55 ரூபாய் 40 காசுகள், இலவச சீருடைக்கு மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள்.

அரசு தீர்மானித்த கூலி வழங்க வேண்டும் என்று கேட்டால் இதுவரை கூட்டுறவு நிர்வாகம் தர மறுக்கிறது. தற்போது தமிழக அரசு புதிய கூலி அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேட்டி ஒன்றுக்கு 69 ரூபாய் 58 காசுகள், சேலை ஒன்றுக்கு 90 ரூபாய் 25  காசுகள், இலவச சீருடை திட்டத்திற்கு மீட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் 16 காசுகளும் வழங்கிட வேண்டும். அரசு அறிவிப்பு வெளியிட்டு ஒருமாத காலம் ஆகிறது. ஆனால் தற்போது வரை பெடல் தறி நெசவாளர்களுக்கு புதிய கூலியை வழங்க மறுப்பது, பழைய கூலியையும் குறைத்தே வழங்குகிறார்கள்.

எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த கூலியை வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்க அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்ட கூலியையும் சேர்த்து பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். லுங்கி தயார் செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்வுவழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கும் 40 சதவீதம் கூலி உயர்வு வழங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சின்னாளபட்டியில் விஸ்வரூபம்...