தி.நகர்-எல்டாம்ஸ் சாலையை 120 கோடியில் இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டுமான திட்டத்தினை கைவிட முடிவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: தி.நகர் - எல்டாம்ஸ் சாலையை இணைத்து 120 கோடியில் மிகப்பெரிய பாலம் கட்டும் திட்டத்தை கைவிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் பாலங்கள் கட்டப்பட்டன. சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பில் சென்னையில் 259 பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சென்னையில் புதிதாக 5 ேமம்பாலங்களும், 16 சிறு பாலங்களும், 3 சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்து பல்வேறு இடங்களில் உள்ள பராமரிப்பு பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு மற்றும் தியாகராய சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிரமாண்ட   மேம்பாலம் ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதன்பிறகு 120 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 995 மீட்டர் நீளத்திற்கு தி.நகர்  தெற்கு போக் சாலையில் தொடங்கி எல்டாம்ஸ் சாலையில் முடியும் வண்ணம் இந்த மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது. முதல்முறையாக டெண்டர் கோரப்பட்ட போது எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுக்க முன்வரவில்லை. இதன்பிறகு 2வது முறையாக மறு ெடண்டர் கோரப்பட்டது. அப்போதும் யாரும் பணியை எடுக்க முன்வரவில்லை. இவ்வாறு தொடர்ந்து 4 முறை டெண்டர் கோரப்பட்ட போதும் இந்த பணியை எடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தை கைவிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கருத்துரு சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன கூட்டத்தில் விரைவில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர்த்து மாம்பலம் ரயில் நிலையம்  மற்றும் தி.நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், அமைக்கப்பட இருக்கும் ஆகாய நடைபாதை பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பாலம் கட்டும் திட்டத்தை கைவிடுவதற்கு சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஒப்புதல் அளிக்கும். இதன்பிறகு இந்த 120 கோடியை கொண்டு வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Related Stories: