×

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

விருத்தாசலம், செப். 19: விருத்தாசலம் பகுதி கடை வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் விருத்தாசலமும் ஒன்று. ரயில் நிலையம், நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல்நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், அரசு கலைக்கல்லூரி, செராமிக் தொழிற்பேட்டைகள், அரசு மற்றும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகள் உள்ளதால் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் தினமும் விருத்தாசலம் வந்து செல்கின்றனர். மேலும் சென்னை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கும்பகோணம், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல வசதியான பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

இதனால் கடைவீதி, பாலக்கரை, சன்னதி வீதி, கடலூர் ரோடு, ஜங்ஷன்ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்படும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடை வீதிகளில் அன்றாடம் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடைவீதி, தென்கோட்டை வீதி, கிழக்கு வீதி, கடலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டுகள் மற்றும் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்தில் சிக்கி  அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து எழுந்த தொடர் புகார்களின் காரணமாக, சாலைகளின் அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி கமிஷனர் பாலு முன்னிலையில் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகள் மற்றும் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த, ஷெட்டுகள் மற்றும் தள்ளுவண்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Action Disposal ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறு ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்