மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது ‘ரூட் தல’ விவகாரம் அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்: 9 பேர் சுற்றிவளைத்து கைது

சென்னை: அமைந்தகரை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த ஜூலை மாதம் பேருந்தில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்னையால் பட்டாக்கத்திகளுடன்  சாலையிலேயே மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கல்லூரி முதல்வர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொடர்ந்து பச்சையப்பன், மாநில, புதுக்கல்லூரி மாணவர்களில் அடிக்கடி மோதிக்கொள்ளும் 98 ‘ரூட் தல’ மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.பின்னர் அனைத்து மாணவர்களிடமும் போலீசார் 107 சட்ட பிரிவுகளின் கீழ், ஓராண்டு நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.

இந்நிலையில் மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ேநற்று மாலை கல்லூரி முடிந்ததும், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தனர். அப்போது, மீண்டும் மாணவர்களிடம் ‘ரூட் தல’ பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் சக நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்துள்ளனர்.பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள்  கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் ரயிலில் சென்றனர். மின்சார ரயில் ராயபுரம் அருகே சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ராயபுரத்தை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சுமார் 20 பேர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு கட்டத்தில் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் ரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை பாதி வழியிலேயே நிறுத்தினர். பிறகு ரயிலில் இருந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது கற்களை கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

நடு வழியில் ரயில் நின்றதால் பயணிகள் சிலர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிலர், காவல் துறை அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்  கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த  கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

 ஆனாலும் போலீசார் விடாமல் துரத்தி ெசன்று மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களான ஆதித்யா, கணேஷ் அபிஷேக், தீனதயாளன், ஹேம்நாத், தமிழ்செல்வன், வாணிவர்மா, கார்த்திக் உள்ளிட்ட 9 மாணவர்களை மடக்கி பிடித்தனர். பிறகு அனைவரையும் எழும்பூர் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் ஐபிசி 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம்

விசாரணையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு குழுவினர் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதில், மற்றொரு குழு மாணவர்களை தாக்குவதற்காக தங்களுக்குள் தகாத வார்த்தைகளால் திட்டியவாறு தகவல் பரிமாறி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு தலைமறைவாக உள்ள சக மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: