சிறுவனை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சிறுவனை தாக்கிய குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் வினோபாஜி நகரை சேர்ந்த ஒரு பெண், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் சென்னையில்  உள்ள ஒரு  பாலிடெக்னிக்கில் படித்து வந்தான். 2017ம் ஆண்டு குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் எனது மகன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து  காவல் நிலையத்தில் அடைத்து வைத்து அவதூறாக பேசி கடுமையாக தாக்கினார்.

இதில், அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனது மகன் சிறுவன் என்ற போதிலும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் முறையாக விசாரணை நடத்தாமல் அவனை துன்புறுத்தினார். எனவே இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ‘சாட்சியம் மற்றும் ஆவணம் வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இன்ஸ்பெக்டர் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படாமல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் அவருக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: