×

பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் கிடக்கும் உயரழுத்த மின்வயர்

* கம்பிகள் தெரிவதால் மக்கள் பீதி * அதிகாரிகள் தொடர் அலட்சியம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே தெரிந்தவாறு உயரழுத்த மின்வயர் கிடப்பதால் அந்த பகுதி மக்கள் பீதிக்கு உள்ளாகி வருகின்றனர்.பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வேதகிரி தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் மின் கம்பி இணைப்பு உள்ளிட்ட வேலைகள் நடைபெற்றன. இதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணியானது சமீபத்தில்தான் முடிந்தது.இந்த வேலை முடிந்த பிறகும் அருகில் உள்ள உயரழுத்த மின் மாற்றிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகளை ஊழியர்கள் முறையாக பூமிக்கு அடியில் புதைக்காமல் வெளியே தெரியும் வகையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் வேதகிரி தெருவில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும்போதும், கடை வீதிக்கு பொருட்கள் வாங்க செல்லும்போதும் மின்சாரம் தாக்கி விடுமோ? என்ற அச்சத்திலேயே நடமாடி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த இடத்தில் பல நாள்களாக உயரழுத்த மின் கம்பி வெளியே தெரியும் நிலையில் ஆபத்தான முறையில் கிடக்கிறது.இதுகுறித்து பம்மல் நகராட்சி நிர்வாகத்திடம் நாங்கள் புகார் தெரிவித்தால் ‘இது எங்களது வேலை இல்லை. நீங்கள் மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள்’ என்று கூறுகின்றனர்.அதன்படி பம்மல் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், ‘இது நெடுஞ்சாலை துறையின் வேலை. நீங்கள் அங்கு சென்று தான் புகார் தெரிவிக்க வேண்டும்’’ என்று எங்களை அலைக்கழித்து வருகின்றனர்.இதனால் வீட்டில் உள்ள குழந்தைகளை விளையாடுவதற்கு கூட, வெளியே அனுப்பவே அச்சமாக உள்ளது. எனவே, திறந்தவெளியில் ஆபத்தான முறையில் கிடக்கும் உயரழுத்த மின் கம்பிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான முறையில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பாடம் கற்க தயாரில்லை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் கடந்த 15ம் தேதி இரவு சாலையில் சரிவர புதைக்கப்படாமல் கிடந்த மின் கம்பியில் கால் வைத்த பள்ளி மாணவன் தீனா (14) மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் மற்றும் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பொதுமக்களின் கடும் அதிருப்தி மற்றும் நீதிமன்றத்தின் கண்டனம் ஆகியவற்றுக்கு உள்ளாகும் நிலை மாநகராட்சிக்கு ஏற்பட்டது.

இவ்வளவு பெரிய சம்பவத்துக்கு பிறகும் பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்வயர் கிடப்பது அரசு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. இதன் மூலம் அரசு அதிகாரிகள் பாடம் கற்க விருப்பம் இல்லாமல் கொஞ்சம் கூட அச்சமின்றி அலட்சியமாக செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது’’ என்றனர்.


Tags : electrician ,road ,Pammal Municipal Office ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...