தத்துவவியல் மாணவன் நீக்கத்தை எதிர்த்து வழக்கு சென்னை பல்கலை. விளக்கம் தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தத்துவவியல் துறை மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கிருபாமோகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:   சென்னை பல்கலைகழகத்தில் உள்ள தத்துவவியல் துறையில் புத்திசம் படிப்பதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு முடிந்து ஜூலை மாதம் 31 முதல் படிப்பை தொடர எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களாக படிப்பை தொடர்ந்து வரும் நிலையில், என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  உரிய கல்விச்சான்றுகள் மற்றும் சேர்க்கை கட்டணம் செலுத்திய பின்னர், எந்தவித குற்றச்சாட்டுகளும் என் மீது இல்லாத நிலையில் காரணம் கூறாமல் என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டுள்ளாதக துணை வேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

 எனது சேர்க்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ‘‘பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில்’’ சேர்ந்ததுதான் என துணை வேந்தர் பேட்டி அளித்துள்ளார்.அதனால் உரிய காரணம் இன்றி என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். என்னை மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மாணவனின் கல்வி பாதிக்கப்படுவதால் படிப்பை தொடர அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சென்னை பல்கலைக்கழகம் வரும் 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: