×

சின்னமனூர் நகராட்சி மெத்தனம் அரசு நிதி உதவி வழங்காமல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை

தேனி, செப். 17:  தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அரசு நிதி உதவி வழங்காமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என பாகுபாடின்றி அத்தனை உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை முடியும் முன்பே இந்த அமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.  ஆனால், தற்போது வரை மிக, மிக குறைந்த அளவு வீடுகளில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என அத்தனை பிரிவுகளில் உள்ள உள்ளாட்சிகளிலும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. நடவடிக்கை எடுத்தால் எத்தனை வீடுகள் மீது எடுப்பது என உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் தவித்துப்போய் உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு அமைப்பு சாதாரண தகர கொட்டகை போட்ட வீட்டில் அமைக்க குறைந்தபட்சம் ஆயிரத்து 500 ரூபாய் தேவைப்படும். கான்கிரீட் வீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சற்று பெரிய பங்களா என்றால் அதன் தரத்திற்கேற்ப செலவு கூடும். பங்களாக்களில் பிரச்னை இல்லை எப்படியாவது அவர்களிடம் பேசி அமைக்க வைத்து விடலாம். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தற்போதைய நிலையில் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க வழியில்லை என கை விரிக்கின்றனர். இலக்கும், கெடுவும் நிர்ணயித்த அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகையாவது வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசு ஒரு பைசா கூட தராமல் மக்களை மிரட்டி உங்கள் வீடுகளில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைத்தே ஆக வேண்டும் எனக்கூறினால் யார் கேட்பார்கள். எனவே, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Chinnamanur Municipality ,
× RELATED சின்னமனூர் புறவழிச்சாலையில் உயரமான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி