×

விபத்தை தடுக்க சொந்த செலவில் தெருவிளக்கு அமைத்த கேஆர்ஆர் நகர் மக்கள்

தேனி, செப். 17: தேனி கேஆர்ஆர் நகர் மக்கள் தங்களது சொந்த செலவில் இரண்டு தெருவிளக்குகள் அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.தேனியில் 21வது வார்டில் உள்ள கேஆர்ஆர் நகரில் 13 தெருக்கள் உள்ளன. கேஆர்ஆர் நகரின் 10வது தெருவும், எம்ஜிஆர் நகரின் மெயின் தெருவும் சந்திக்கும் இடத்தில் ரோடு மிகவும் வளைவாக உள்ளது. இந்த இடத்தில் மின்கம்பங்கள் எதுவும் இல்லை. மாறாக டிரான்ஸ்பார்மர் வேறு உள்ளது. எனவே, இந்த இடத்தில் நகராட்சியால் தெருவிளக்கு அமைக்க முடியவில்லை. இரவு நேரங்களில் இந்த வளைவு இருள்சூழ்ந்து இருப்பதால், எதிரெதிரே வாகனங்களில் வருபவர்கள் இடித்துக் கொள்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்தனர். முடிவில், நேற்று முன்தினம் இந்த வளைவில் அமைந்துள்ள வீட்டில் இருந்து மின் இணைப்பு கொடுத்து, இருட்டான பகுதியில் இரண்டு எல்இடி பல்புகளை பொறுத்தி உள்ளனர். இதற்கான செலவுகளை தெருமக்களே பகிர்ந்து கொண்டனர். இதனால் இப்பகுதியில் நல்ல வெளிச்சம் கிடைப்பதால், வாகன விபத்துக்கள் குறையும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : KRR Nagar ,accident ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...