×

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் குப்பை குவிக்கும் நகராட்சி நிர்வாகம்

அருப்புக்கோட்டை, செப். 17: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் குவிக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றாததால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 8வது வார்டு சொக்கலிங்கபுரத்தில் ஜவகர் சங்கத்தெரு மெயின் ரோட்டில் பாலம் உள்ளது. இப்பாலத்தில் பொதுமக்களும், நகராட்சியினரும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை கடப்பவர்கள், துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்துச் செல்கின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. நகராட்சி ஊழியர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை பாலத்தில் கொட்டி வைத்து, உடனுக்குடன் அள்ளுவதில்லை. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
தண்ணீர் வசதியில்லாத சுகாதார வளாகம்
இப்பகுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதியில்லை. நகராட்சி நிர்வாகம் 3 முறை போர்வெல் அமைத்தும் தண்ணீர் வரவில்லை.
சுகாதார வளாகத்தை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பராமரித்து வருகின்றனர்.தனியார் லாரி மூலம் ரூ.650க்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால், கழிப்பறையை குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்கின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அவசரத்திற்கு செல்ல சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகம் தடையின்றி செயல்பட போதுமான தண்ணீரை நகராட்சி வழங்க வேண்டும். இந்த பகுதியில் மழைநீர், கழிவுநீர் செல்ல பிரதான ஓடை அமைக்கப்பட்டது. இதில் மரம், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. ஓடையை ஒட்டிய வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை குழாய்கள் மூலம் நேரடியாக ஓடையில் கலக்கின்றனர். குப்பைகளையும் கொட்டுகின்றனர். ஓடையை தூர்வார நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷெட்டோடு நிற்கும் குடிநீர் சுத்திகரிப்பு பிளாண்ட்
பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, பிளான்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போர்வெல் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக குப்பைகளை கொட்டி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தாமல், உடனுக்குடன் குப்பையை அப்புறப்படுத்தவும், துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை வாங்கி வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அமுதா என்பவர் கூறுகையில், ‘சுகாதார வளாகத்தில் போதுமான தண்ணீர் வசதியில்லை. நகராட்சி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார வளாகம் முன்பு குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார்.
இது குறித்து ஜெயலட்சுமி என்பவர் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதுதான் முக்கிய பிரச்னை. வாறுகால்களை சுத்தம் செய்வதில்லை. குப்பைக்கு வரிவசூல் செய்கின்றனர்.
ஆனால், குப்பை வாங்க வருவதில்லை. பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட பிறமடை ஓடை முட்புதர் மண்டி கிடக்கிறது.
கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. ஓடையை தூர்வார வேண்டும். சொக்கலிங்கபுரம் பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை வாங்க அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.

Tags : administration ,Chokalingapuram ,Aruppukkottai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...