×

தொண்டி-மதுரை தேசிய சாலை சுரங்க பாதையில் மழைநீரால் அவதி

சிவகங்கை, செப். 17:  சிவகங்கையில் மதுரை, தொண்டி சாலை ரயில்வே கிராசிங்கில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரயில் பாதை கிராசிங் உள்ளது. இதில் தென்னக ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகாலம் நடந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2016ம் ஆண்டு பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் சுரங்கப்பாதை பணிகள் நடந்து முடிவடைந்து போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. பாலத்தின் மேற்பகுதியில் சென்றால் சிவகங்கை நகர்ப்பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை செல்லலாம். இதனால் வெளியூர் செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள் பாலம் வழியே செல்லும். சுரங்கப்பாதையில் ரயில்வே கிராசிங் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், ரயில்வே ஸ்டேசன், நகராட்சி அலுவலகம் செல்லும் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செல்வர்.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிறிய அளவில் மழை பெய்தாலே சுமார் நான்கு அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கிறது. நீர் வெளியேற வழி அமைக்காமல் உள்ளதால் தொடர்ந்து பல நாட்களுக்கு நீர் தேங்குகிறது. பாதையின் கீழே சிமெண்ட் தளம் உள்ளதால் நீர் உறிஞ்சப்படுவதற்கும் வழி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிடைந்து வருகின்றனர். இந்த ஒரு வழியை தவிர மாற்று வரி இல்லாததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் கூறியதாவது: பாலப்பணிகள் நடந்த போது மாற்றுச்சாலை சரிவர அமைக்காமல் அவதி ஏற்பட்டது. பணிகள் முடிந்தும் தொடர்ந்து சுரங்கப்பாதையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நீர் வெளியேற வழியில்லாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிறிய மழை பெய்தாலே பல நாட்கள் நீர் தேங்குகிறது. எப்படி இந்த வழியே செல்ல முடியும். உடனடியாக நீரை அகற்றவும், மழை நீர் நிரந்தரமாக வெளியேற தேவையான மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thundi-Madurai National Road Tunnel ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை