×

நான்கு வழிச்சாலையில் வழிப்பறி அதிகரிப்பு

திருப்புவனம், செப். 17: திருப்புவனம் நான்குவழி சாலையில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை விரகனூர் ரிங் ரோட்டிலிருந்து திருப்புவனம் வழியாக பரமக்குடி வரை நான்குவழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அடைந்து விடும் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பஸ்கள் நகருக்குள் செல்லாமல் ஊருக்கு வெளியே புறவழிச்சாலை வழியே செல்கின்றன. திருப்பாச்சேத்தி ஊருக்குள் செல்லாமல் சுங்கச்சாவடியிலிருந்து நேராக மானாமதுரைக்கு செல்லும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை வழியாக டூவீலரில் செல்பவர்களை மர்மநபர்கள் குறிவைத்து பெண்களின் சங்கிலியை பறித்து செல்வதும், கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை பறித்து செல்வதும் தொடர்கிறது.

நகரின் வெளியே சாலை செல்வதால் ஆள் நடமாட்டம் இல்லாதது வழிப்பறி கும்பலுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. கடந்த வாரம் லாடனேந்தலை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டூவீலரில் சிலைமான் கீழடி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்து சென்றனர். இதுபோன்று பல வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து மணலூர்-சிலைமான் கீழடி பிரிவு இடையே நடந்து வருகிறது. இரண்டு மாவட்ட எல்லை என்பதால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். இதனை தடுக்க மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை