×

சாலைக்கிராமம் அருகே சாத்தனூரில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி

* அச்சுறுத்தும் கழிப்பறை * அறவே இல்லாத கட்டமைப்பு
இளையான்குடி, செப். 17: தரம் உயர்த்தப்பட்ட சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைக்கிராமத்திலிருந்து 8 கிமீ தொலைவில் சாத்தனூர் உள்ளது. இங்கு கடந்த 15.06.1973ம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இந்த பள்ளியில் சாத்தனுர், பூலாங்குடி, வாணியக்குடி, சீவலாதி, புதுக்கோட்டை, நன்னியாவூர், பஞ்சனுர், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை செயல்பட்டு வந்த இந்த அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கடந்த 2009ம் ஆண்டு கிராம கல்விக்குழு சார்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.2லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கடந்த 22.09.2014ம் ஆண்டு சாத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டுவரும் இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி, விளையாட்டு மைதானம், மற்றும் ஆசிரியர் அறை, பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கணிதப்பிரிவு, மற்றும் கலைப் பிரிவு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் கணிதப்பிரிவு மாணவர்களின் ஆய்வக வசதி இல்லாததால், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வக பரிசோதனைகளை மேற்கொன்டு வருகின்றனர். படிப்பில் சாதனை படைத்து வந்த இந்த சாத்தனூர் அரசுப் பள்ளியில், கட்டிடம் தற்போது விரிசல்கள் ஏற்பட்டு சரிந்து விழும் நிலையில் உள்ளது. 7 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் புதர், கருவேல மரம் மண்டியுள்ளது. அதனால் பள்ளி நேரத்திலேயே வண்டுகள், பூச்சிகள் வகுப்பறையை நோக்கி வருகின்றன. அதனால் மாணவ, மாணவிகள் உள்பட ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர். வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடி நிழலில் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு உரிய கட்டமைப்பு இல்லாததால், விளையாட்டின் மேல் ஆர்வம் குறைந்து விளையாட்டை மறக்கும் நிலைக்கு இந்த கிராமப்புற மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் இயங்கிவரும் இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Secondary School ,facilities ,road village ,Sathanur ,
× RELATED இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி