திருமங்கலம் அரசுமருத்துவமனையில் கொசுவலையுடன் படுக்கை வசதி

திருமங்கலம், செப்.17: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக குழந்தைகள் வார்டு, பெண்கள் வார்டில் கொசுவலைகளுடன் நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களில் மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக நோயாளிகள் ஏராளமாக வர துவங்கியுள்ளனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொசுக்களின் மூலமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் உள்ள குழந்தைகள் வார்டு, பெண்கள் வார்டில் கொசுவலை வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் உள்ள பெட்களில் கொசுவலை சுற்றி நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பூமிநாதன் கூறுகையில், மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல், மலேரியா, டெங்கு பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம். இதனையொட்டி முன்னேச்சரிக்கையாக மருத்துவமனையில் உள்ள 145 பெட்டுகளில் 18 பெட்டுகளுக்கு கொசுவலையுடன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை நோய் எளிதில் பாதிக்காத வகையில் கொசுவலை விரிக்கப்பட்டுள்ளது. இது தவிர பாதிப்பு தெரியவரும் நோயாளிகள் இந்த பகுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவர் என்றார்.

Related Stories: