×

குஜிலியம்பாறை அருகே 100 அடி கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

குஜிலியம்பாறை, செப். 17:  குஜிலியம்பாறை அருகே 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்னை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜிலியம்பாறை அருகே சுப்பிரமணியபிள்ளையூரைச் சேர்ந்தவர் மணி (27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (23). குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைமுடைந்த நந்தினி நேற்று அப்பகுதியிலுள்ள  தண்ணீர் இல்லாத சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தற்கொலை செய்யும் நோக்கில் குதித்தார். இதில் உடம்பில் அடிப்பட்ட நந்தினி வலி தாங்காமல் சத்தம் போட்டுள்ளார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் சத்தம் வருவது குறித்து கிணற்றை பார்த்தனர். அப்போது கிணற்றில் பெண் ஒருவர் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) முருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் கிடந்த நந்தினியை உயிருடன் மீட்டனர். பின்னர் வடமதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்சில் ஏற்றி நந்தினியை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் விழுந்த நந்தினிக்கு உதட்டில் காயமும், பின்பக்க முதுகில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Firefighters ,
× RELATED பழநி மலைக்கோயில் வின்ச்சில்...