×

சேதமடைந்து கிடக்கும் கால்வாய்கள் பெரியாறு தண்ணீர் வீணாகும் அபாயம்

மேலூர், செப்.17: பெரியாறு கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் பல இடங்களில் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் அபாயம் நிலவுகிறது.
ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் தாலுகா பெரியாறு தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முதலில் இரு போக சாகுபடி பகுதியான கள்ளந்திரி வரை வந்தடைந்தது.
 இதனை தொடர்ந்து புலிப்பட்டி  கால்வாய் வழியாக ஒரு போக சாகுபடி பகுதியான மேலூருக்கு திறக்கப்பட வேண்டும். அரசாணைப்படி செப்.15ல் மேலூருக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி மெயின் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மதுரை மாவட்ட எல்லையான குறிச்சிப்பட்டியில் உள்ள குறிச்சி கண்மாய்க்கும், இ.மலம்பட்டியில் உள்ள எரிச்சி கண்மாய் வரைக்கும் முதற்கட்டமாக செல்லும். அது நிறைந்த பிறகு, படிப்படியாக மதகுகள் அடைக்கப்பட்டு முன்னதாக உள்ள கண்மாய்களுக்கு திருப்பி விடப்படும். தண்ணீர் உபரியாக கிடைக்கும் காலத்தில் குறிச்சி கண்மாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் பிரித்து வழங்குவது வழக்கம்.
அணையில் இருந்து வரும் தண்ணீர் சிந்தாமல் சிதறாமல் விளை நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கால்வாயில் சிமென்ட் சிலாப்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் தண்ணீர் வரும் காலங்களுக்கு முன்பாக, சேதமான சிலாப்புகள் சீர் செய்யப்பட்டு, கால்வாய் மராமத்து பணிகள் மேற்கொள்வது பொதுப்பணித்துறையின் வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு இதுவரை இப்பணியை செய்யவில்லை. நரசிங்கம்பட்டி, நாவினிப்பட்டி, கீழவளவு, சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி போன்ற பகுதிகளில் பல இடங்களில் முற்றிலும் சிலாப்கள் இல்லை. பல இடங்களில் பெரும் சேதத்துடன் உள்ளன.கீழவளவு ஊராட்சி முன்னாள் தலைவர் தர்மலிங்கம் கூறுகையில், ‘‘கீழவளவு, பூதமங்கலம் பகுதியில் உள்ள கால்வாய்கள் சீர் செய்து பல வருடங்கள் ஆகிறது.

ஆனால் ஆண்டுதோறும் கால்வாய்களை சீர் செய்ததாக பொதுப் பணித்துறையினர் கணக்கு மட்டும் காட்டி விடுகின்றனர். பெரியாறு அணையில் நீர்மட்டம் போதிய அளவு உயர்ந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம். ஆனால் அந்த தண்ணீர் வீணாகாமல் செல்ல வேண்டிய கால்வாய்கள் சீர் செய்யப்படாமல் உள்ளது.  தண்ணீர் திறக்கும் முன்பு வாய்க்கால்களை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும். கடந்த சில வருடமாக விவசாய பணிகள் சரி வர நடக்காமல் உள்ள மேலூர் பகுதியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...