×

திண்டுக்கல்- திருச்சி சாலையில் தொடர்கதையாகும் மயில்கள் இறப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திண்டுக்கல், செப். 17:  திண்டுக்கல்- திருச்சி சாலையில் வாகனங்களில் அடிபட்டு மயில்கள் அதிகளவில் இறந்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வடமதுரை, அய்யலூர் மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிகளவு வசித்து வருகின்றன. போதிய மழைப்பொழிவு இல்லாததால் மலைகளில் வறட்சியான நிலை உள்ளது. இதனால் மயில்கள் இரைதேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகிறது. இவ்வாறு வரக்கூடிய மயில்கள் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்தில் சிக்கி பலியாகுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மயில்கள் கூட்டத்தை விட்டு பிரிந்த சுமார் 2 வயது பெண் மயில் திண்டுக்கல்- திருச்சி சாலையை, ஆரோக்கியசாமி நகர் அருகே கடந்த போது அவ்வழியே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. அவ்வழியே வந்தவர்கள் இறந்த மயிலின் உடலை மீட்டு சாலையோரம் வைத்து விட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வழக்கம்போல் நீண்டநேரத்திற்கு பிறகு வந்த அய்யலூர் வனத்துறையினர், மயிலின் உடலை பெற்று சென்றனர். தொடர்ந்து மயிலின் உடலை காணபாடி அரசு கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின் அய்யலூர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இப்பகுதயில் மயில்களின் இறப்பை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : death ,road ,Dindigul-Trichy ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...