திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, செப். 17:  திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்க கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்வதற்கும், பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கும் தமிழக அரசு சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டத்தில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண உதவித்தொகையும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், டிகிரி படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை இத்திட்டத்தில் 404 பெண்கள் பயன்பெற மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு பயனாளிக்கும் திருமண உதவித்தொகையோ, தாலிக்கு தங்கமோ கிடைக்கவில்லை. எனவே கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், இத்திட்டத்தில் பயன்பெற மனுக்கள் அளித்த அனைவருக்கும் உடனடியாக திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அனைத்து பயனாளிகளுக்கும் உதவித்தொகை, தாலிக்கு தங்கம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமை வகிக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி விளக்கவுரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, தங்கவேல், ராமு, ஜெயபால், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: