2 லாரிகள் இருப்பதாக போலி ஆவணம் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ10 லட்சம் கடன் பெற்ற நபர் கைது

சென்னை, செப்.17:  சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் எம்எம்டிஏ மாத்தூர்  4வது குறுக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் தனது பெயரில் 2 லாரிகள் உள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை கொடுத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு 2 மாதங்கள் முறையாக தவணையும் கட்டினார். அதன்பிறகு அவர் கடனை திரும்ப கொடுக்கவில்லை. வாங்கிய கடனுக்கு பணம் கட்டாததால் பைனான்ஸ் நிறுவன கிளை மேலாளர் வெங்கட சிவசுப்பிரமணியம் (47) என்பவர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்ய சென்றார். அப்போது மணிகண்டன் பெயரில் எந்த லாரியும் இல்லாதது தெரியவந்தது. தனது பெயரில் 2 லாரிகள் உள்ளது போல் போலி ஆவணம் தயாரித்து அந்த ஆவணத்தை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து ரூ.10 லட்சம் பெற்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து மோசடி செய்த மணிகண்டன் மீது பைனான்ஸ் நிறுவன மேலாளர் வெங்கட சிவசுப்பிரமணியன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

* மதுரை மாவட்டம், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (50). இவரது மகன் ஆனந்த் (23). இவர் நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து அவரது தந்தை பாண்டியராஜனுக்கு தகவல் கொடுக்க மதுரைக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு செல்போன் மூலம் ஆனந்த் இறந்த தகவலை தாம்பரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பாண்டியராஜன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் கார் மோதி படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

* சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே 4 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே சுற்றித்திரிந்த நான்கு ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் பரத், பிரகாஷ், ராபர்ட் என தெரியவந்தது. பின்னர் பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 3 பேரை கொலை செய்து வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனது மாமியாரை பார்க்க வந்ததாகவும், அப்போது அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் நண்பர்களுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும் போலீசிடம் தெரிவித்தார். தொடர்ந்து பாஸ்கர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

*  வேளச்சேரி காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வேளச்சேரி 100 அடி பைபாஸ் சாலையில் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து  அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.  அவர் பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.   இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.  பிடிபட்டவர், கே.கே. நகரைச் சேர்ந்த கணேசன் (35) என்பதும் இவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

*  சென்னை வாலாஜா சாலையில் ேநற்று முன்தினம் மாலை மினி தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  கலைவாணர் அரங்கில் இருந்து உழைப்பாளர் சிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில்  அமர்ந்து இருந்த மேற்கு வங்கம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மொபீயுதீன்(58), அவரது மனைவி அதிராபீவி(51) அவர்களின் மகன் அமீனாகத்தூர்(23) ஆகியோர் படுகாயமடைந்தனர். புகாரின்படி போலீசார் மினி தண்ணீர் லாரி ஓட்டுனரான ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியை ேசர்ந்த செல்வம்(35) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி விமலா (30). இவர், நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரத்தில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.  அதன் பின்னர், நேற்று காலை தாம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்து, ஈக்காட்டுத்தாங்கல் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் திடீரென விமலா கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர்,

* புளியந்தோப்பு அடுத்த கனிகாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (39). இவர் திருமண நிகழ்ச்சி மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு மைக்செட் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் திருவிழாவில் மைக் செட் அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மது போதையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் சத்தம் அதிகமாக உள்ளதாக கூறி அருண்குமாரிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அடித்து விட்டு தப்பிவிட்டனர்.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத் குமார் (26), லட்சுமணன் (25) ஆகிய 2 பேரை  கைது செய்தனர்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்துக்கு ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப். 17: கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதியை, அம்மா உணவகத்துக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கட்டிட தொழிலாளர் நலனுக்காக கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்  அமைக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்ட ஆகும் செலவில் ஒரு சதவீத தொகை வரியாக வசூலிக்கப்பட்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் வாரியத்தில் கணக்கில் தற்போது ரூ. 3 ஆயிரம் கோடி இருப்பு உள்ளது. இந்த நிதி மூலம் கட்டிட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், பிரசவ கால மருத்துவ நிதி ஆகிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த நிதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்குமிடங்கள் கட்டுவதற்காக ரூ.31.65 கோடியை அரசு பயன்படுத்தியுள்ளது. வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

 நலவாரியத்தின் கீழ் சொற்ப தொகையே கட்டிட தொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள காப்பகத்தினால் கட்டிட தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 2 அரசாணைகளை பிறப்பித்தது.  அந்த அரசாணையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுக்கு,  நல வாரியத்தின் நிதியிலிருந்து அம்மா உணவகத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்திற்கு ஒதுக்கும் அரசாணைகளுக்கு தடை விதித்து, அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, அம்மா உணவகம் அனைத்து இடங்களிலும் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன. அம்மா உணவகத்திற்கு வாங்கும் பொருட்களுக்கு பணம் தருவதற்காக நிதி இல்லை. இதை சமாளிக்க கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய தொழிலாளர்களுக்கு இலவச உணவு தருவதாக நிதியை வாரியத்திலிருந்து நிதியை எடுக்க முடிவு செய்துள்ளார்கள் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசும், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியமும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories: