வையம்பட்டி அருகே மழைவேண்டி தேக்கமலையான் கோயிலில் கிராமமக்கள் சிறப்பு வழிபாடு

மணப்பாறை, செப்.17: வையம்பட்டி அருகே மழை வேண்டி தேக்கமலையில் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிரிவலம் சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது துலுக்கம்பட்டி . இங்குள்ள தேக்கமலையின் அடிவாரத்தில் தேக்கமலையான் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் மற்றும் பவுர்ணர்மி நாட்களில் தேக்கமலையை சுற்றி கிரிவலம் செல்வது இப்பகுதி மக்களின் வழக்கம். இந்நிலையில், கோடை காலமான மே மாதம் முதல் தற்போது வரை இப்பகுதியை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. ஆனால், அருகில் உள்ள வையம்பட்டியின் கிழக்கு பகுதி மற்றும் அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் மழை அதிகளவு பெய்துள்ளது. இதனால் தங்கள் கிராமத்தில் தெய்வ குற்றம் ஏதும் நிகழ்ந்து விட்டதோ என சந்தேகம் அடைந்த மக்கள் தேக்கமலையை சுற்றி மூன்று நாட்கள் கிரிவலம் வந்து அடிவாரத்தில் உள்ள தேக்கமலை கோயிலில் அன்னதானம் நடத்துவது என முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று முதல் நாள் கிரிவலம் வந்த மக்கள், இரண்டாவது நாளாக ஈரத் துணியுடன் தேக்கமலையை சுற்றி கிரிவலம் வந்தனர். அதன் பின்னர், அடிவாரத்தில் உள்ள தேக்கமலையான் கோவிலில் அன்னதானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், துலுக்கம்பட்டி, கல்பட்டி, கட்டக்காம்பட்டி, நடுப்பட்டி, புதுவாடி, பாலப்பட்டி, புதுக்கோட்டை ,மொட்டையம்பட்டி, வத்த மணியாரம்பட்டி, உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவானைக்கோவில் மற்றும் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து தேக்கமலையானை வழிபட்டனர். மழை வேண்டி கிராம மக்கள் நடத்திய இந்த கிரிவலத்தால், தற்போது இப்பகுதியில் ஓரளவு மழை பெய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: