ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்குவதில் குளறுபடி: ஒரு லிட்டர் அளிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை, செப். 17: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்குவதில் தொடர்ந்து மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் 2 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று வந்தவர்களுக்கு இந்த மாதம் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும், பொதுமக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, சிலிண்டரே இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 6 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 13 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே மண்ணெண்ணெய் தனியார் கடைகளில் ரூ.50 வரைக்கு விற்பனையாகிறது.

Advertising
Advertising

மத்திய அரசு தமிழக அரசுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்துவிட்டதால் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சரிவர மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. ஆனாலும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு கடந்த மாதம் திடீரென 75 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதம் மட்டுமே தமிழக அரசு மண்ணெண்ணெய் சப்ளை செய்து வருகிறது.இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1ம் தேதி முதல் கடைக்கு கடை மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:சென்னையில் பரங்கிமலை மண்டலத்திற்கு உட்பட்ட பம்மல், ஆலந்தூர், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் கடந்த மாதம் ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய், சிலிண்டரே இல்லாத அட்டைதாரர்களுக்கு 4 லிட்டர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைதாரருக்கு ஒரு லிட்டரும், சிலிண்டரே இல்லாதவர்களுக்கு 3 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

அதேநேரம் தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் ஒரு சிலிண்டர் குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் ஆகவும், சிலிண்டர் இல்லாத குடும்ப அட்டைக்கு 6 லிட்டரும் வழங்கப்படுகிறது. இப்படி கடைக்கு கடை வித்தியாசம் ஏற்படுவதால், பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.அதேபோன்று பரங்கிமலை, தாம்பரம் மண்டலத்திற்கு உணவு பொருள் அலுவலகத்தில் உதவி ஆணையர்கள் பணியிடம் காலியாக உள்ளது. சைதாப்பேட்டை அதிகாரியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: