பண்ணவாடி பரிசல் துறையில் படகு பழுதானதால் போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர், செப்.17:  பண்ணவாடி பரிசல்துறையில் படகு பழுதானதால், படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி பரிசல் துறைகளிலிருந்து, தர்மபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூர் பரிசல்துறைகளுக்கு காவிரியை கடந்து செல்ல விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இரு மாவட்ட மக்களும், வியாபாரம் நிமித்தமாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல், பண்ணவாடி பரிசல்துறையில் உள்ள விசைப்படகு பழுதானது. அவசர தேவைக்கு வைத்திருக்கும் படகும் பழுதாகி உள்ளது. இதனால் பிற்பகல் ஒருமணி முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல், தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர், நெருப்பூர், ஏரியூர் பகுதிகளிலிருந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூரில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். விசைப்படகு பழுது சரி செய்யப்படாவிட்டால், இப்பகுதி மக்கள் பஸ்களில் சுமார் 70 கி.மீ தொலைவு சுற்றிச் சென்று பயணம் செய்து தான் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, படகு பழுது சரி செய்த பிறகே இயக்கப்படும் என்று ஏலம் எடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: