மாவட்டம் முழுவதும் 190 மி.மீ., மழை பதிவு

சேலம், செப்.17: சேலம் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு பெய்த மழை, 190 மில்லி மீட்டர்  அளவில்  பதிவானது. தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென கருமேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி பகுதிகளில் தாழ்வான இடத்தில் மழைநீர் தேங்கியது. சாலையோரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், இரவு 8 மணி வரை வாகன ஓட்டிகள் சிரமடைந்தனர்.மாவட்டத்தில் ஓமலூர், இடைப்பாடி, ஏற்காடு ஆத்தூர் பகுதியில் அதிகளவு மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 189.9 மில்லி மீட்டரில் மழை பதிவானது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையின் அளவு வருமாறு(மில்லி மீட்டரில்): ஆணைமடுவு-47, ஓமலூர்-38, ஏற்காடு-24, இடைப்பாடி-24, ஆத்தூர்-12.4, சேலம்-10.4, காடையாம்பட்டி-10, மேட்டூர்-6.2, பி.என்.பாளையம்-6, சங்ககிரி-4.4, தம்மம்பட்டி-3, கரியகோயில்-2, வீரகனூர்-2, வாழப்பாடி-0.5 என பதிவாகியிருந்தது.சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி, இடைப்பாடி, வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், நேற்று இரவு 7 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அதே போல், இடைப்பாடி மற்றும் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆட்டையாம்பட்டியில் மாலை 6 மணி அளவில் ஒரு மணி நேரமாக இடி, மின்னல், காற்று இல்லாமல் மழை பெய்தது.

Related Stories: