×

ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர் வாருவதில் அலட்சியம் மழைக்காலத்தில் வெள்ள பெருக்குஅபாயம்: அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

திருவள்ளூர், செப். 17: கடந்த 2015ம் ஆண்டு மழைநீர் வெளியேற வழியில்லாததால், திருவள்ளூரை மூழ்கடித்த இயற்கையின் பாடத்தை அதிகாரிகள் மறந்து விட்டனர். இதனால், வரும் மழைக் காலத்திலும் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் நகரில் மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை.
தற்போது, திருவள்ளூர் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் வடிகால்வாயில் சேகரமாகும் தண்ணீர், வெளியேற்றுவதற்கான வழியும் இல்லை. அவற்றை தேடுவதற்கான முயற்சியிலும், நகராட்சி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபடுவதாக தெரியவில்லை.
பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, ஜெ.என்.சாலை, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக, வி.எம்.நகர், 100 அடி சாலையைக் கடந்து, காக்களூர் ஏரியில் சேரும் பொதுப்பணி துறை கால்வாய் உள்ளது. இதேபோல், ஒன்றாவது வார்டான டோல்கேட்டில் துவங்கி, சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, குளக்கரை தெரு, பஸ் நிலையம் வழியாக, காக்களூர் ஏரிக்கு செல்லும் மற்றொரு பொதுப்பணி துறை கால்வாயும் உள்ளது.
இந்த இரண்டு கால்வாய்கள் மட்டுமே நகரின் கழிவுநீரை வெளியேற்றும் வடிகால். ஆனால், இந்த இரண்டு பிரதான கால்வாய்களும், ஆக்கிரமிப்பு, தூர் வாராதது, கழிவு பொருட்களால் அடைப்பு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றன. இதன் காரணமாக, இவ்விரண்டு கால்வாய்களும், தூர்ந்து கழிவுநீர் ஏரிக்கு வெளியேற வழியில்லாமல் தேங்கி உள்ளன.
மேலும், ஜெயா நகர், அம்சா நகர், ஏரிக்கரை குடியிருப்பு போன்ற பகுதிகளிலும், மழைநீர் வெளியேற வழியில்லை. இதன் காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த பருவ மழையால், அம்சா நகர், ஜெயா நகர், அய்யனார் அவென்யூ, வி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. நாள்கணக்கில் வெள்ளம் வடியாமல் மக்கள் பரிதவித்தனர்.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பு முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை திருவள்ளூர் நகரில் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற தீர்வு காணப்படவில்லை. இரண்டு பிரதான கால்வாய்களும் தூர் வாரப்படுவதற்கான அறிகுறியே இல்லை.
இதனால், வரும் வடகிழக்கு பருவ மழை பெய்தால், மழைநீர் வெளியேற வழியில்லாமல், வெள்ள பெருக்கு ஏற்பட்டு, மற்றொரு முறை திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்  உள்ளது.
 எனவே, நகராட்சி, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Tags : flooding ,season ,Dwellers ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...