விவசாயிகளுக்கு வரப்பு பயிர் விதைகளை வழங்க வேண்டும்

ஓமலூர், செப்.17:  விவசாயிகளுக்கு வரப்பு பயிர் விதைகளை வழங்க வேண்டும் என, விற்பனையாளர்களுக்கு துணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மக்காசோளப் பயிரை தாக்கும் படைப்புழுவை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்காசோளம் விதைகளுடன் சூரியகாந்தி, தட்டைப்பயறு, எள் போன்ற வரப்பு பயிர் விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் நாசர் விதை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளார். இவற்றில் மக்காச்சோளம் பயிரிடவுள்ள விவசாயிகளுக்கு சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகிய ஊடுபயிர் செய்ய ஹெக்டேருக்கு தலா 4 கிலோ என்ற அளவிலும், எள் பயிர் செய்ய ஹெக்டேருக்கு தலா 500 கிராம் என்ற அளவிலும், மக்காச்சோளம் விதையுடன் விதை விற்பனையாளர்கள் வழங்கவேண்டும். இதன்படி, விவசாயிகள் பயிரிட்டு மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படும் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், நாமக்கல், ராசிபுரம், மோகனூர், மல்லசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விதை மாதிரிகள் எடுத்து தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர் தெரிவித்துள்ளார்.

Related Stories: