ஓமலூர் வட்டாரத்தில் மரவள்ளி நடவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

ஓமலூர், செப்.17: ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டார கிராமங்களில், மரவள்ளி சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறுமாறு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்களை அதிகரிக்க, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது போதுமான மழை பெய்து வருவதால், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய தகுந்த தருணம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

நெல் மற்றும் காய்கறி சாகுபடியை காட்டிலும், மரவள்ளியில் கூடுதல் வருவாய் ஈட்டலாம். வயலை நன்றாக உழுது மரவள்ளி குச்சியை நட்டால் போதும். தற்போது பெய்துவரும் மழைக்கு மரவள்ளி நன்றாக வளரும். இதற்கு குறைந்தளவில் தண்ணீர் போதும். மரவள்ளி சாகுபடிக்கு 2 முறை களைகள் நீக்கம் செய்து, ஒரு முறை உரமிட்டால் போதும். ஒரு ஏக்கரில் 6 மாதங்களுக்கு பின்பு ₹50 ஆயிரம் வருவாய் ஈட்டலாம். ஓராண்டுக்கு 2 முறை அறுவடை செய்யும் போது ₹1 லட்சம் வருவாய் கிடைக்கும். அதே ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டால் ஆண்டுக்கு ₹50 ஆயிரம் தான் கிடைக்கும். ஆனால், மரவள்ளி சாகுபடியில் ₹லட்சம் வரை வருவாய் ஈட்டலாம். மானாவாரி மற்றும் விவசாய தோட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய அனைத்து உதவிகளையும் ஓமலூர் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும், மரவள்ளிக்கு நூறு சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனமும் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் ஓமலூர் தோட்டக்கலைத்துறையை அணுகி மரவள்ளி சாகுபடி செய்து பயனடையலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: