ஆத்தூர் ஒன்றியத்தில் ₹10 லட்சம் மதிப்பு பணிகளுக்கு யாரும் டெண்டர் கோரவில்லை

ஆத்தூர், செப்.17:  ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ₹10 லட்சம் செலவில் நடைபெற வேண்டிய பணிகளுக்கு, ஒப்பந்ததாரர்கள் டெண்டர் கோராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் கிராமத்தில், சிறு பாலம் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க ₹10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் டெண்டர் கோரலாம் என அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால், ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள், இதற்கு முன் உபரி நிதி  ஒதுக்கீட்டுக்கான பணிகளுக்கு போடப்பட்ட டெண்டருக்கு, இதுவரை பணி உத்தரவு வழங்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அந்த உத்தரவு வழங்கிய பின்னர் தான், வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்களில் கலந்து கொள்வோம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒப்பந்தத்தில்  ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ‘ஏறத்தாழ 6 மாதமாக உபரி நிதி ஒதுக்கீடு பணி உத்தரவு, வழங்காமல் கிடப்பில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரத்திலேயே ஒன்றிய அதிகாரிகளுக்கு இனிவரும் ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்தோம். ஆனால், எங்களது கோரிக்கையை ஏற்காமல், நேற்று டெண்டர் அறிவிப்பு செய்ததால், அதை புறக்கணித்து இருக்கிறோம். இதனால், ஆத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: