×

திருப்போரூர் பிரணவமலையில் எரியாத மின்விளக்குகள்: இரவில் நடந்து செல்லும் மக்கள் அவதி

திருப்போரூர், செப்.17: திருப்போரூர் பிரணவமலையில் எரியாத மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் நடந்து செல்லும் மக்கள் அவதியடைகின்றனர்.
திருப்போரூரில் கந்தசுவாமி கோயிலை ஒட்டி பிரணவமலை உள்ளது. இந்த மலையின் மீது பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் இந்த மலைக்கோயிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு பின் கோயில் நடை சாத்தப்படும்.
மாதத்தில் 2 முறை பிரதோஷ வழிபாடு சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. இதற்காக பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதையொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் உச்சி வரை மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகள் பொருத்தப்
பட்டன.
இந்த மலைக்கோயிலில் குரங்குகள் அதிகமாக வசிப்பதால் அவை மின் கம்பங்களில் ஏறி மின் வயர்களை பிடித்து தொங்கி விளையாடுகின்றன. இதனால் மின்வயர்கள் வலுவிழந்து அவ்வப்போது அறுந்து விடுகின்றன. இதனால் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒருவித அச்சத்துடனே செல்கின்றனர்.
பிரணவமலைக்கு பின்புறம் எம்ஜிஆர் நகர், குமரன் நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் அப்பகுதி மக்கள், மலைப்படிகட்டுகளில் ஏறி இறங்கி தங்கள் வீடுகளுக்கு செல்வர்.
கடந்த சில நாட்களாக மலைப் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டு இருந்த மின் விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் இந்த பிரணவமலைக்கு செல்லும் மின் வழித்தடத்தை பூமிக்கடியில் கேபிள் வடிவில் புதைத்து எடுத்து செல்ல வேண்டும் என்றும், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...