×

ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் மாசடைந்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு

போச்சம்பள்ளி, செப்.17:மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து மாசடைந்துள்ளதால், ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு தென்பெண்ணையாறு உள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவேரிப்பட்டணம், மடம், நெடுங்கல், அகரம், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு வழியாக ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றை பொது மக்கள் புனித நதியாக கருதி நீராடுவதால் மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு, பொன்னியாறு எனவும் அழைக்கப்படுகிறது. போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சமேடு உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல், பண்டிகை நாட்களான ஆடி 18 மற்றும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் 20 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். பொதுமக்களால் புனித ஆறாக கருதப்படும் மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு, கடந்த பல மாதங்களாக அதிகளவில் ஆகாயத்தாமரை படர்ந்து மாசடைந்துள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருவதால், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : river ,
× RELATED ரூ.250 கோடி தேங்காய் எண்ணெய் வியாபாரம் வீழ்ச்சி