×

போச்சம்பள்ளியில் துணிகரம் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

போச்சம்பள்ளி, செப்.17:  போச்சம்பள்ளியில் எல்ஐசி ஏஜெண்ட் வீடு உட்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து ₹1.70 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(60). எல்ஐசி ஏஜெண்டான இவர், நேற்று முன்தினம் மாலை, குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியசாமி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ₹1.50 லட்சம், 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், அருகேயுள்ள மற்றொருவர் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 வெள்ளி கொலுசுகள், ₹20 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியசாமி அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘போச்சம்பள்ளி பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், மத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் 5க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் ₹1 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், எங்களது உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : robbery ,Pochampalli Venture 2 ,
× RELATED வீட்டை உடைத்து நகை கொள்ளை