போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி:

மதுராந்தகம், செப். 17: மதுராந்தகம் நகராட்சியில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
மதுராந்தகம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மதுராந்தகம் பஸ் நிலையம் அருகில் நடந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் சந்திரன், தலைமை காவலர்கள் பாலமுரளி, ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, ஆட்டோவை நிறுத்த கூடிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். மற்ற இடங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது, 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் அதன் விதிமுறைகள் ஆகியவை குறித்தும், முக்கியமாக பொதுமக்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் கூறுகையில், மதுராந்தகம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு முதலில் போக்குவரத்து குறித்த சட்ட திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என முடிவு செய்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம் என்றார்.

Tags : Auto Drivers ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி