வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு: இருளர் இன மக்கள் கோரிக்கை.

காஞ்சிபுரம், செப்.17: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் புத்திரன்கோட்டை பெரியார் நகர், காஞ்சிபுரம் வட்டம் ஏரிவாக்கம், திருப்போரூர் வட்டம் தையூர், ஆலத்தூர், சின்னகாயார், கரும்பாக்கம், குப்பத்துக்குன்று உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
தாங்கள் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். பட்டா இல்லாததால் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியவில்லை. மேலும் மின்சாரம், குடும்ப அட்டை உள்ளிட்டவை பெற முடியவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான இருளர் இன மக்களுக்கு  குடிமனை பட்டா இதுவரை வழங்காமல் உள்ளது. குறிப்பாக சாதி சான்றிதழ் வழங்காததால் கல்வி உதவித் தொகை பெற முடியாமல் இருளர் இன மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் கம்பராஜபுரத்தில் குடிமனை பட்டா இல்லாததால் தொகுப்பு வீடுகளுக்கு விண்ணப்பித்தும் வீடு வழங்கவில்லை.  தமிழக அரசு தற்போது குடிமனை குறித்து வெளியிட்டுள்ள அரசாணைபடி, மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா.சரவணன், மாவட்ட தலைவர் அழகேசன், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : collector ,
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சி...