அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, செப்.17: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதால் அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமராவதி அணையானது 90 அடி கொள்ளளவு உடையது. கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் மள,மளவென உயர்ந்து தற்போது 85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று காலை முதல் அதிகரித்துள்ளது. எனவே அணை விரைவில் தனது முழு கொள்ளளவை அடைய வாய்ப்புள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் 88 அடியை தொடும் முன்பாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படும்.

நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் அணையில் இருந்து ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்படும். எனவே கரையோரம் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி   இதுகுறித்து அமராவதி வடிநில உட்கோட்டம்  உதவி செயற்பொறியாளர் சரவணன் எச்சரித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்றிரவு அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் டாம்,டாம் போட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: