மாறுதலாக வங்கி கணக்கிற்கு வந்த பணத்தில் மகளுக்கு திருமணம் செய்த தம்பதிக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர், செப்.17: திருப்பூரில் மாறுதலாக தனது வங்கி கணக்கில் வந்த பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் செய்த தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 தீர்ப்பளித்தது.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பகுதியில் வசிப்பவர் குணசேகரன் (54).  இவரின் மனைவி ராதா (48). குணசேகரனுக்கு திருப்பூர் கார்ப்பரேசன் வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்துள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு வங்கி கணக்கு எண் மாறுதலாக ரூ.40 லட்சம் பணம் குணசேகரனின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகத்தின் சார்பாக குணசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், தனது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.40 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல், அதனை எடுத்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

மேலும் மீதமிருந்த பணத்தில் தனது மனைவி பெயரில் சில சொத்துகளை வாங்கியுள்ளார். இதனை அறிந்த வங்கி நிர்வாகத்தினர் இது குறித்து மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குணசேகரன், ராதா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கானது திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் இருவரையும் கோவையிலுள்ள மத்திய சிறையிலடைத்தனர்.


Tags :
× RELATED கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயற்சி