இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மா.கம்யூ ஆலோசனை

கோவை, செப். 17:  தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு நடத்துவது என்ற அறிவிப்பு மற்றும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது என கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்  கோபுரம்  அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்திய வழகறிஞர் ஈசன், சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய 5 பேர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இதையடுத்து,பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பவர்கிரிட் நிறுவனத்தின் மூலம் மின்கோபுரம் அமைக்க முயற்சித்து வருகிறது. விவசாயிகள் அனுமதியின்றி  அவர்களின் நிலத்தில் புகுந்து அளவீடு செய்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்காரணமாக பல்வேறு வழக்குகள் விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ளது.  பெண்கள், முதியவர்கள் என்பதைக்கூட பார்க்காமல் காவல்துறையினரை கொண்டு நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம்  குண்டடத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தில் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணியை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஈசன் உள்ளிட்ட ஐந்து பேரை  பேச்சுவார்த்தை என கூறி அழைத்து வந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடக்கமுடியாத நிலையில் உள்ள முதியவர் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது. விளைநிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து  வருகிற 18ம் தேதி, தந்தி சட்ட எரிப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது.தமிழ்நாடு அரசு 5, 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது என தெரிவித்துள்ளார்கள், இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படாது. இடைநிற்றல்தான் அதிகரிக்கும். அமித்ஷா இந்தி தான் தேசிய மொழி என்கிறார். இந்த இரண்டு நடவடிக்கைகளை கண்டித்து வலுவான போராட்டம் நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது. நடிகர் சூர்யா திரைப்பட விழா ஒன்றில்  கோட்சே பற்றி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: