சுகாதாரத்துறை மெத்தனம் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கோவை, செப்.17: கோவை மாநகர் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தன போக்கால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இந்த பொருட்களை தடையை மீறி பயன்படுத்துபவர்களை கண்டறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு கடந்து ஜனவரி மாதம் முதல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள், விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த சில மாதங்களாக கோவை மாநகராட்சியில் இந்த சோதனை மந்த நிலையில் உள்ளது. இதனால் மாநகரின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ரயில்நிலையம், டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்கியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் மண்டல சுகாதார அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் என 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களை உள்ளடக்கி மண்டல வாரியாக குழு அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு, உற்பத்தி குறித்து கண்காணிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்க குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: