பொது தேர்வு முறை கண்டித்து சிஇஓ அலுவலகம் முற்றுகை

கோவை, செப். 17:  தமிழக அரசு சார்பில் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை கண்டித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 20 பேரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்பினர், சமூகஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertising
Advertising

மேலும், பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை கண்டித்து நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  மாநில தலைவர் குணசேகரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், இந்த பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் எனவும், பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதில், மாவட்ட தலைவர் பூர்ணிமா நந்தினி, ரஞ்சினி கண்ணம்மா, பவன்குமார், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தடைமீறி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 20 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர்.

 இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்ட கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில், கோவை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் அஷ்ரப், மாவட்ட குழு உறுப்பினர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்தனர். கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் அசார், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நர்மதா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: