×

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது நகை, பொருட்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம், செப். 17: ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், இரும்புலிக்குறிச்சி, குவாகம், செந்துறை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். மேலும் கோயில் பூட்டு மற்றும் உன்டியல்களை உடைத்து மணிகள், விளக்குகள் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த திருட்டு வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் ஆலோசனையின்படி ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தியாகராஜன், நடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர் செந்தில்குமார், முதல்நிலை காவலர் மணிவண்ணன், காவலர்கள் ராஜேஷ், மணிவாசகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நத்தக்குழியை சேர்ந்த ரவி (49), கொடுக்கூரை சேர்ந்த வடிவேல் (50), கார்த்திக் (27), பெரியாக்குறிச்சியை சேர்ந்த சங்கர் (30), அலாரம்குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (35) ஆகியோரை நேற்று முன்தினம் ஆண்டிமடம் சந்தைதோப்பு மற்றும் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள், மணிகள், குத்துவிளக்குகள் என மொத்தம் 42 கிலோ பித்தளை பொருட்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனம், ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...