இந்தியாவின் ஒரே மொழி இந்தி என கூறிய அமித்ஷாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தஞ்சை, செப். 17: தஞ்சையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாவரம் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தியாவின் ஒரே மொழி இந்தி, இந்தியாவின் பொது மொழி இந்தி, உலக அரங்கில் இந்தி தான் இந்தியாவின் அடையாளம், இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது. அமித்ஷாவின் பேச்சு என்பது இந்திய கூட்டாட்சி முறைக்கும், பன்முக தன்மைக்கும் எதிரானது மட்டுமல்ல அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.

Advertising
Advertising

இது தேசிய, இன, மொழிகள், பண்பாடு, மாநில உரிமைகள் மீது பாஜ அரசு தொடுத்திருக்கும் தாக்குதல். இந்தி வழியாக இந்துத்துவத்தையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சி. தமிழகம் ஒருபோதும் பாஜவின் முயற்சியை அனுமதிக்காது. எனவே அமித்ஷா தன் கருத்தை உடனே திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (18ம் தேதி) தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் குருசாமி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாச்சலம், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: