×

கணக்கப்பிள்ளைபுதூர்- காமக்காபட்டி இடையே அமைப்பு சென்டர் மீடியனால் 3 கிமீ சுற்றி செல்லும் வாகனங்கள்

அரவக்குறிச்சி, செப். 17: அரவக்குறிச்சியை அருகே நான்கு வழிச்சாலையில் கணக்குப்பிள்ளைபுதூரிலிருந்து காமக்காபட்டிக்கு செல்லும் சாலையில் சென்டர் மீடியன் சுவர் அமைக்கப்பட்டு அடைபட்டு போனதால் வாகன ஓட்டிகள் 3 கிமீ சுற்றி செல்லும் நிலையில் அவதிப்படுகின்றனர்.  சென்டர் மீடியன் சுவரில் நான்கு முனை சாலை சந்திக்கும் அந்த இடத்தில் மட்டும் ஏற்கனவே இருந்தது போல பாதை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு 78 கிமீ தூரம் நாற்கரச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அரவக்குறிச்சியிலிருந்து 3 கிமீ தூரத்தில் கிழக்கே காமக்காபட்டிக்கு பிரிந்து செல்லும் சாலையும் மேற்கே கணக்குப்பிள்ளைபுதூர் வழியாக அரவக்குறிச்சிக்கு வரும் சாலையும் நான்கு முனை சாலை சந்திக்குமிடம் உள்ளது. இவ்வழியாக சீத்தப்பட்டி, ரெங்கபாளையம், கஞ்சமாரம்பட்டி, திருக்கூரணம், ஈசநத்தம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அரவக்குறிச்சிக்கு தினசரி வேலைக்கு வருவோர், பள்ளிக்கு வரும் மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியின் போது சாலையின் நடுவில் சென்டர் மீடியன் எனப்படும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் அரவக்குறிச்சியிலிருந்து காமக்காபட்டி வழியாகச் செல்பவர்களும், காமக்காபட்டி பகுதியிலிருந்து அரவக்குறிச்சிக்கு வருபவர்களும் சென்டர் மீடியன் சுவர்எழுப்பப்பட்டுள்ளதால் சாலையை நேரடியாகக் கடக்க முடியாமல் இடதுபுறமோ அல்லது வடது புறமோ 3 கிமீ சுற்றி வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கால விரயமும் வாகனங்களுக்கு அதிக எரிபொருள் செலவும் வீணாக ஏற்பட்டு பல்வேறு வகையில் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சைக்கிளில் அரவக்குறிச்சி வரும் பள்ளி மாணவர்கள் சுற்றி வர வேண்டியுள்ளதால் சிரமப்படுகின்றனர். இதனால் சில சமயங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை தள்ளிக் கொண்டே நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் சுவரை கடக்க முயலும் போது அதி வேகமாக வரும் வாகனங்களால் பெரும் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. ஆகையால் நான்கு முனை சாலை சந்திக்கும் அந்த இடத்தில் மட்டும் ஏற்கனவே இருந்தது போல தகுந்த பாதுகாப்புடனும், உரிய எச்சரிக்கை பலகையுடனும் பாதை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்களுக்கு...