×

நாகர்கோவிலில் வீடுகளுக்கு நடுவில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி பெண்கள் போராட்டம்

நாகர்கோவில், செப்.17 : நாகர்கோவில் கேப் ரோட்டில் வீடுகளுக்கு நடுவே டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று டாஸ்மாக் கடைக்கு மது வகைகள் ஏற்றி வந்த டெம்போவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் கோட்டார் கேப் ரோட்டில் செட்டித்தெருவில் தனியார் கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் இந்த டாஸ்மாக் கடைக்கு மது வகைகள் டெம்போவில் கொண்டு வரப்பட்டன. இந்த தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்ததும், ஏராளமானவர்கள்  திரண்டு வந்தனர். டெம்போவில் இருந்த மதுபான வகைகளை இறக்க விடாமல் தடுத்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில், அமர்ந்து போராட்டமும் நடத்தினர். இது பற்றி அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள், நாங்கள் டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம் என்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் சிறிய அளவிலான ஒரு சந்தில் உள்ளது. சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. ேமலும் பள்ளி, கல்லூரிகள் அமைந்திருக்கின்றன. அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள், இளம்பெண்கள் ஏராளமானவர்கள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால், போதை ஆசாமிகளால், பெரும் இடையூறு ஏற்படும். ஆனால் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் கடைக்கு அனுமதி கொடுக்காதீர்கள் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து மது வகைகளை கொண்டு வந்துள்ளனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் மக்கள் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டி வரும். மனசாட்சியே இல்லாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றனர். பின்னர்  கலெக்டரிடம் மனு அளித்து தீர்வு தேடி கொள்கிறோம். டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதையடுத்து மது வகைகள் வந்திருந்த டெம்போ திரும்பி சென்றது. டாஸ்மாக் கடையும் நேற்று திறக்கப்பட வில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முகூர்த்த நாளில் கடை திறப்பு

ஆவணி மாதம் அதிக முகூர்த்த நாள்கள் கொண்ட மாதம் ஆகும். நேற்று ஆவணி கடைசி முகூர்த்தம் ஆகும். இந்த நாளில் பல புதிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன. ஏராளமான திருமண நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால், டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்து, மதுவகைகளை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். கடை ஷட்டரில் பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருந்தது. புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பகல் 12 மணியில் இருந்தே குடிமகன்கள் சிலர் காத்திருந்தனர்.

Tags : Women ,task force ,Nagercoil ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...