×

ஒரே நாளில் 21 பேர் கைது குமரியில் வாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

நாகர்கோவில், செப். 17  குமரியில் வாரண்ட் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். நேற்று முன் தினம் ஒரே நாளில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 4 துணை போலீஸ் சரகங்கள் உள்ளன. இதில் சுமார் 650க்கும் மேற்பட்டவர்கள் வாரண்ட் குற்றவாளிகளாக உள்ளனர். அடிதடி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் தொடர்ந்து நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலும் இருந்து வருகிறார்கள். இவர்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களும் உண்டு. வழக்குகளில் ஆஜர் ஆகாததால், நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே நீதிமன்றத்தால் பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டு  தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த சில நாட்களாக வாரண்ட் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேர ரோந்து  பணிகளின் போது வாரண்ட் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 21 வாரண்ட் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் திருட்டு, அடிதடி வழக்குகளில் தொடர்பு உடையவர்களும் உண்டு. தொடர்ந்து வாரண்ட் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.
இதே போல் நேற்று முன் தினம் (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே பல இடங்களில் திருட்டு மது விற்பனை கொடி கட்டி பறந்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்றதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து