×

கன்னியாகுமரி - காரைக்குடி கடற்கரை ரயில் பாதைக்கு வழி பிறக்குமா? தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க கோரிக்கை திருவனந்தபுரத்தில் நாளை மேம்பாட்டு பணி ஆலோசனை

நாகர்கோவில், செப்.17: திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகின்ற ரயில்வே மேம்பாட்டு பணிகள் ஆலோசனை கூட்டத்தில் குமரி, நெல்லை உட்பட 39 எம்.பிக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும், விவாதிக்கவும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் பங்கேற்கின்ற கூட்டம் நாளை (18ம் தேதி) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி எம்.பி.க்கள் உட்பட கேரளாவில் உள்ளவர்கள், மங்களூரு என்று மொத்தம் 39 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு பின்னர் தற்போது திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. ரயில்வே வாரிய தேர்வு தமிழில் எழுதுவது தொடர்பான உத்தரவு சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னரே ரயில்வேயால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்ற கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து எம்.பி.க்கள் வசந்தகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டி புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. தற்போது நடைபெற்றுவருகின்ற திட்ட பணிகள் அனைத்தும் முடிந்தபிறகே புதிய பாதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில்வளர்ச்சியின்மை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களுர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும். தென்தமிழக எல்லைக்குள் 1947க்கு பிறகு மொத்தம் 131 கி.மீக்கு மட்டுமே புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை.

கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 462.47 கி.மீ தூரத்தில் ரூ.1965.763 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் ஆளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

இதனை போன்று திருநெல்வேலியிருந்து சங்கரன்கோவிலுக்கு 160 கி.மீக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வேபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடுதல் ரயில்வழித்தடம் அமைக்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்ற ரூ.900 கோடி கொண்ட திட்டத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை இருந்துள்ளது.

தமிழகம்  அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். இந்த ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாட்டில் தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிப்படியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட  முன்னிலையில் உள்ளன. தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளன. வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது போன்று ரயில்அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு எம்.பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாகர்கோவில் ஜங்ஷன்

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு இல்லாமல் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. வாகன நிறுத்த பிரச்னை, பிரிபெய்டு ஆட்டோ பிரச்னை, ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளை நடைமேடையில் வந்து அச்சுறுத்துதல், பயணசீட்டு கவுண்டர்கள் பிரச்னை, லிப்ட் மற்றும் தானியங்கி படி இயங்காமல் இருத்தல், நடைமேடை3ல் போதிய வசதிகள் இல்லாமல் இருத்தல், தமிழ்மொழி புறக்கணிப்பு, இது போன்ற பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பில் புதிய ரயில்கள்

திருவனந்தபுரம்  - மங்களூர் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு, செய்ய வேண்டும். கொச்சுவேளி - வேளாங்கண்ணி தடத்தில் தினசரி ரயில் நாகர்கோவில் வழி இயக்க வேண்டும். நாகர்கோவில் - சென்னை தினசரி ரயில் சேவை, நாகர்கோவில் - சென்னை ஞாயிறு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்து வருகிறது.

நாகர்கோவில் டவுன்

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் உள்ளன. இந்த நடைமேடையில் இருந்து இளைஞர்கள்கூட ரயிலில் ஏறமுடியாது. வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கில்லை. தற்போது  இருவழிபாதை திட்ட பணிகளை பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்தில் உள்ள நிலைய அலுவலகம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளது. இதை பொதுமேலாளர் சுற்றுபயணத்தின்போது திறந்து அதில் பயணசீட்டு முன்பதிவு, சதாரணபயணசீட்டு போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இரணியல் ரயில் நிலையம்

இரணியலில் தேவையான வசதிகள் இல்லாமல் உள்ளது. ரயில் நிலையமும் ஒதுக்கு புறமான பாதுகாப்பற்ற பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம்  இருப்புபாதையை இருவழிபாதையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெறும் பணிகளில் இரணியல் ரயில் நிலையம் நான்கு தண்டவாளங்கள் கொண்ட ரயில்  நிலையமாக மாற்றம் செய்யப்படும். இவ்வாறு செய்யும் போது தற்போது உள்ள அனைத்தும் மாறுதல் செய்யப்படும். இவ்வாறு மாற்றம் செய்யும் போது ரயில்நிலைய அதிகாரி அலுவலகம் மற்றும் நுழைவுவாயில் தற்போதைய இடத்திலிருந்து மாற்றம் செய்து ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் மார்க்கத்தில் செல்லும் போது உள்ள துணைமின் நிலையத்தின் எதிர்புறம் நடைமேடை இரண்டில் அமைக்க வேண்டும்.

பஸ் போர்ட்

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு அருகில் மத்திய மாநில அரசுகள் இணைந்து புதிதாக பஸ்போர்ட் அமைக்கும் திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த திட்டத்தால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் புதிய பஸ்போர்ட் அமைந்துவிடும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்த திட்டத்திற்கு ரயில்வேயின் பங்களிப்பு மற்றும் இணைப்பு சாலை அமைக்கும் திட்டத்தை நிலைய விரிவாக்கத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும்.

Tags : MPs ,Kanyakumari - Karaikudi Beach Railway Line Southern District ,Thiruvananthapuram ,
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...