வெப்ப சலனத்தால் பெய்யும் திடீர் மழை தூத்துக்குடியில் பரவும் மர்மக்காய்ச்சல்

ஸ்பிக்நகர், செப். 17: தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்ப சலனத்தால் பெய்துவரும் திடீர் மழையால் மர்மக்காய்ச்சல் பரவுகிறது. மேலும் பல்வேறு நோய் பாதிப்புக்கு மக்கள் உள்ளாகுகின்றனர்.  எனவே, குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருகுமாறு மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாநகர், புறநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்ப சலனத்தால் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருமிறது. இதனால், மர்மக்காய்ச்சல் பரவுவதோடு சளி உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகுகின்றனர். மேலும் மழையால் பெருக்கெடுக்கும் தண்ணீர் கழிவுநீரோடு கலந்து தேங்கிநிற்பதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்த அளவே பருவமழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தின்  பெரும்பாலான ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளும் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இந்நிலையில்  கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மாலை வேளையில் மழை பெய்தபோதும் நீர்மட்டம் உயரும் அளவுக்கு மழை இல்லை. அத்துடன் வெப்பச்சலனத்தால் பெய்யும் இம்மழையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரும் மர்மக்காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். அத்துடன் பெண்கள் கடுமையான உடல்வலி மற்றும் மேல்வலியால் அன்றாடப் பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

Advertising
Advertising

ரத்த பரிசோதனை இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில்,  ‘‘தற்போது பெய்துவரும் திடீர் மழையால தூத்துக்குடி மாநகரின் பல்வேறு இடங்களில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. பெரும்பாலும் இதனால்  குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் குழந்தைகளை பெற்றோர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து தாங்களாகவே மருந்து, மாத்திரை கொடுக்கக்கூடாது. தொடர்ந்து 3 நாட்களுக்குமேல் காய்ச்சல், இருமல், சளி இருந்தால்  ரத்தபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அத்துடன் குடிநீரை காய்ச்சி வடிகட்டியபிறகே பருக வேண்டும். இரவு நேரங்களில் கொசு கடிக்காமல்  பார்த்துக்கொள்ளவேண்டும். தற்போதுள்ள காலநிலைமாற்றத்தால் பாதுகாப்பாக  இருப்பது அவசியம்’’ என்றார்.

Related Stories: