வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை முறைப்படுத்தகோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி, செப். 17: வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்காமல் முறைப்படுத்த வலியுறுத்தி மீரான்குளத்தை சேர்ந்த பெண்கள் தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது. அதே வேளையில் அங்கு திரண்டுவந்த பேய்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சேர்ந்த முருகேசன் தலைமையிலான பெண்கள் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: எங்கள் ஊரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். எங்கள் ஊர் மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணம் பெறப்பட்டு வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

 பஞ்சாயத்து தலைவர்கள் மாறிய நிலையில், குடிநீர் இணைப்பு பெற்றவர்களில் சிலருக்கு மட்டும் குடிநீர் இணைப்பு பெற்றதற்கான ரசீதுகளை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சரியான முறையில் வழங்கவில்லை. பணம் செலுத்திய ரசீதுகளை வழங்காமல் காலம் கடத்திவந்த நிலையில் தற்போது பஞ்சாயத்து தலைவரும் இல்லை. இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வீடுகளிலுள்ள குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தாமல் துண்டிப்பதாகக் கூறி வருகின்றனர். எங்கள் ஊர் மக்கள் அனைவரும் இந்த குடிநீரை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பஞ்சாயத்து நிர்வாகம் செய்த குளறுபடிக்காக, குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதை விடுத்து அவற்றை முறைப்படுத்திடவேண்டும். மேலும் இதற்கான கட்டணத்தை செலுத்துவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: