தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கொலை வழக்குகளில் 29 பேர் கைது

தூத்துக்குடி, செப். 17: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் நடந்த 11 கொலை வழக்குகளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அருண் பாலகோபாலன் தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் எதிரிகள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 4 கொலை வழக்குகளில்  17 பேர் கைது செய்யப்பட்டதோடு 5 எதிரிகள் சரணடைந்தனர்.  செப்டம்பர் மாதத்தில் பதிவான 3 கொலை வழக்குகளில் 14 பேர் கைதான நிலையில் ஒருவர் சரணடைந்தார். இதே போல் நேற்று முன்தினம் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முருகேசன் மற்றும் விவேக் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை புதுக்கோட்டை அருகே நடந்த லாரி டிரைவர் கொலை வழக்கிலும் எதிரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ம் தேதி முறப்பநாடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் இருவர் கைதானதோடு  ஒருவர்  மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Advertising
Advertising

 இவற்றை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 2015ம் ஆண்டு 76 வழக்குகளும், 2016ம் ஆண்டில் 64 வழக்குகளும், 2017ம் ஆண்டு 67 வழக்குகளும், 2018ம் ஆண்டில் 60 வழக்குகளும், 2019ல் இதுவரை 54 வழக்குகளும் பதிவாகியுள்ளன.   கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 10 வருடம் சிறைத் தண்டனையும், 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை மாதத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகியவை 35 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 20 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அவற்றின் மதிப்பு ரூ.7,73,230 ஆகும்.  இது 57 சதவீதமாகும்.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றின்  இதில் 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 38  எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 5,65,100. மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  நடப்பாண்டில் இதுவரை பதிவாகியுள்ள 264 வழக்குகளில் 167 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூபாய் 73 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. இது 63 சதவீதமாகும். கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 2 பேர் போதை தடுப்புச் சட்டத்தின் கீழும், ஒருவர் பாலியல் குற்றத்திற்காகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போதை தடுப்பு குற்றத்தில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 111 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த இரு மாதங்களில் மட்டும் 47 வழக்குகளில் 59 ரவுடிகள்கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 119 வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

புகார் கொடுத்தால் நடவடிக்கை

இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்னர் 75வது பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்குகளை போலீசார் மறுபடியும் தூசி தட்டி எடுத்து வழக்குப்பதிவு செய்வது குறித்து கேட்ட கேள்விக்கு எஸ்பி அருண் பாலகோபாலன் பதிலளித்து கூறுகையில், ‘‘அந்தந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ வரம்பில் வரும். இது குறித்து புகார்கள் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’  எனறார்.

 இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன, திருடப்பட்ட செல்போன்கள் காவல்துறையால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை  எஸ்பி., அருண் பாலகோபாலன் சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

Related Stories: