×

வேலூர் மாவட்டத்தில் கடை உரிமம் புதுப்பிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ₹100 அபராதம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பேச்சு

வேலூர், செப்.17: வேலூர் மாவட்டத்தில் கடைகளின் உரிமம் புதுப்பிக்காதவர்களுக்கு நாளொன்றுக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும் என்று வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பேசினார்.காட்பாடியில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம், ஓட்டல்களில் தரமான உணவு விநியோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பாக 2,714 பேர் உரிமம் பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 915 பேர் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தரமான பொருட்களில் உணவு தயாரிக்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் செய்யக்கூடாது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்கக்கூடாது. உணவு பொருட்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் எண்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.உணவகம் மற்றும் உணவு பொருட்களின் விற்பனை கடைகளில் லைசென்ஸ், பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பாக புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும்.’ என்றார்.தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கந்தவேல், சுரேஷ், நாகேஸ்வரன் ஆகியோர் வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர், 10 கடைகளுக்கு உரிமங்களும், 15 பேருக்கு பதிவு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags : Food safety nomination officer ,talks ,district ,Vellore ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்